ஆடல் கலை, பாடல் கலை, எழுத்துக் கலை, பேச்சுக் கலை இப்படி பல கலைகள் இருப்பினும் என்னைப் பொருத்தவரை சமையல் கலை என்பதையே எல்லாவற்றிலும் மேலானதென்பேன். வயிற்றுக்குச் சோறிடும் கலை. முக்கியமான ஒன்று., இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஒரு கலை. புராணகால நளனிலிருந்து...இன்றைய அறுசுவை அரசர் நடராஜர் வரை ஆண்கள் சமையலில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள். இதை எப்போது, எப்படி பெண்களிடம் தள்ளிவிட்டார்கள் என்பதை ஆய்வு செய்து, அப்புறம் அப்படிப்போடுவோம். இப்போது சில சட்னி வகைகளைப் பார்ப்போம். நான் கொடுக்கும் ஒவ்வெரு உணவிற்கும் தேவையான பொருட்களுடன்., உங்கள் அன்பையும் சேர்த்துக்கொள்ளவும். அன்புடன் தயரித்து, அன்புடன் பரிமாறப்படுகின்ற பழையசோற்றிற்கு, அன்பில்லாமல் பரிமாறப்படும் பிரியாணியை விட சுவை அதிகம். சட்னிக்கு இம்பூட்டு அறிவுரையா? . அப்பிடிங்கிறிங்க! ..சரி ...எடுத்துக்கங்க கரண்டியை....
தக்காளி சட்னி - 1தேவையானவை :தக்காளி - 2 (சிறியதாக இருந்தால் 3)
பெரிய வெங்காயம் - 1 (சிறியதாக இருந்தால் 2)
வற்றல் மிளகாய் - 3
கொத்துமல்லி இலை - கைப்பிடியளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை : 1. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து, வற்றல் மிளாகய் சேர்க்கவும்.
2. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துப் பரிமாறவும்.
இட்லி, தேசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும் இந்த தக்காளி சட்னி.
தக்காளி சட்னி - 2தேவையானவை :தக்காளி - 2 (சிறியதாக இருந்தால் 3)
பெரிய வெங்காயம் - 1 (சிறியதாக இருந்தால் 2)
வற்றல் மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
.கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :1. வெங்காயம், தக்காளி, வற்றல் மிளகாய், பூண்டு, உப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுக்கவும்.
2. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆறியபின் உபயோகிக்கவும்.
இந்த தக்காளி சட்னியும் இட்லி, தேசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.
வேர்க்கடலைச் சட்னி - 1தேவையானவை :வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்)
வற்றல் மிளகாய் - 3
புளி - சிறிது (பாக்களவு)
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :வேர்க்கடலை, வற்றல் மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுத்து உபயோகிக்கவும்.
தயிர் சாதம், புளி சாதம் போன்ற அனைத்து வகை சாதங்களுக்கும் சுவை கூட்டக்கூடிய சட்னி இது.
வேர்க்கடலைச் சட்னி -2தேவையானவை :வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்)
வற்றல் மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
புளி - சிறிது (பாக்களவு)
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி
செய்முறை :1. வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் புளி, பூண்டு, பச்சை,வற்றல் மிளகாய்கள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
2. இத்துடன் வேர்க்கடலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுத்து உபயோகிக்கவும்.
தயிர் சாதம், புளி சாதம் போன்ற அனைத்து வகை சாதங்களுக்கும் ஏற்ற இந்தச் சட்னி, முன்று நாட்கள் வரை கெடாது.